×

மோடியை கொலை செய்ய திட்டமிடும் வகையில் எந்த மின்னஞ்சலும் அனுப்பப்படவேயில்லை! : பாஜகவின் நாடகத்தை அம்பலப்படுத்திய அமெரிக்க நிறுவனம்!!

நன்றி குங்குமம்

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யத் திட்டமிட்டு கடிதம் எழுதியதாக கைது செய்யப்பட்டுள்ள சமூக செயற்பாட்டாளர் ரோனா வில்சனின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து பெறப்பட்ட கடிதம் பொய்யானது என்று அமெரிக்க மென்பொருள் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
‘‘எதனால் ரோனா வில்சன் மீது இப்படியொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது என்று அறிவதற்கு முன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாட்டில் பேசு பொருளாக இருந்த ‘பீமா கோரேகான்’ வழக்கு என்ன என்பதை பார்த்துவிடுவோம்...’’ என்று ஆரம்பித்தார் ‘பீமா கோரேகான் - பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு’ என்ற நூலின் ஆசிரியரான முனைவர் மு.இனியவன்.

“2018 ஜனவரி 1 அன்று கிழக்கிந்திய கம்பெனிக்கும் மராட்டிய கூட்டமைப்பின் ஒரு பிரிவினருக்கும் இடையிலான போரின் 200வது ஆண்டு வெற்றி நாள் நிகழ்ச்சியை ஒட்டி பீமா கோரேகானில் உள்ள வெற்றித் தூண் அருகே லட்சக்கணக்கான தலித்துகள் கூடினர். அப்போது எதிர்பாராத வகையில் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு இரண்டு நாட்களுக்கு முன் 2017 டிசம்பர் 29 அன்று நடந்த சிறு அசம்பாவித சம்பவத்தின் அடிப்படையில் பீமா கோரேகான் வழக்கு பதியப்பட்டது.

முதல் தகவல் அறிக்கையில் மிலிண்ட் ஏக்போட்டே, சம்பாஜி பைடே என்ற இரு இந்துத்துவா அமைப்பினர்தான் இந்த கலவரத்திற்குக் காரணமானவர்கள் என்று பதியப்பட்டது. ஆனால், அவர்களை புனே காவல் துறை உடனடியாக கைது செய்யவில்லை.

பல மாதங்களுக்குப் பிறகு உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு அதில் ஒருவரை மட்டும் மார்ச் 14, 2018 அன்று (கலவரம் நடந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு) புனே காவல் துறை கைது செய்தது. அவரும் எளிமையான வழியில் பிணை ஆணை பெற்று 14 ஏப்ரல், 2018ல் வெளியே வந்து விடுகிறார்.

இதனிடையே சம்பவம் நடந்து ஆறு மாதம் கழித்து ஜூன் 6, 2018 அன்று இந்த சம்பவத்திற்கு காரணம் மாவோயிஸ்ட் அமைப்பினர்தான் என்று, மனித உரிமை செயல்பாட்டாளர் ரோனா வில்சனை தில்லி முணீர்கா பகுதியில் கைது செய்தார்கள்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரோனா வில்சன், புதுதில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் காலம் முதலே மனித உரிமைகள் சிறைவாசிகளுக்கும் கடைப்பிடிக்கப் பட வேண்டும் என்று குரல் கொடுத்து வருபவர். 2001 பாராளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட கிலானியின் விடுதலையை வலியுறுத்தி ஜனநாயக ரீதியான போராட்டங்களை ரோனா வில்சன் முன்னெடுத்திருக்கிறார்.

இதுபோன்ற காரணங்களால் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கங்களோடு இவருக்கு தொடர்பு இருக்கிறது; அந்த இயக்கத்தில் முக்கியமான நபராக செயலாற்றுகிறார் என்ற குற்றச்சாட்டை காவல் துறையினர் முன்வைத்தார்கள்.

ஜூன் மாதம் கைதான ரோனா வில்சனோடு சமூகப் போராளிகள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனந்த் டெல்டும்ப்டே, கவுதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன், கன்சால் மற்றும் வேறு சிலரை காவல்துறையினரும் தேசிய புலனாய்வு ஏஜென்சியும் கைது செய்துள்ளனர்.

ரோனா வில்சன் கைதாகும் போது லேப்டாப், பென் டிரைவ், செல்போன், ஹார்டு டிஸ்க் என ஏழு பொருள்களை காவல் துறை கைப்பற்றியது. பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டி எழுதப்பட்ட கடிதம் ஒன்று வரவர ராவிடம் இருந்து இவரது மின்னஞ்சல் முகவரிக்கு வந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம்தான் வரவர ராவ் கைது செய்யப்பட்டார்...’’ என்று சுருக்கமாக ‘பீமா கோரேகான்’ வழக்கு பற்றி கூறிய இனியவன், இப்போது வந்திருக்கும் அறிக்கை பற்றி பேச ஆரம்பித்தார்.

“இந்த வழக்கு குறித்து கணினி தடய அறிவியல் துறையில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் மசாச்சூசெட்ஸைச் சேர்ந்த நிறுவனமான ‘ஆர்செனல் கன்சல்டிங்’ ஆய்வு செய்தது. இந்நிறுவனத்தின் முடிவு அமெரிக்காவில் வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் சமீபத்தில் வெளியானது.

அதில், ரோனா வில்சனின் லேப்டாப் செயல்பாட்டில், தானாக தலையீடு செய்யும் வைரஸ் 2016ல் திடீரென உள்புகுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த வைரஸ் வழியாக 2018 வரை ரோனா வில்சனுக்கே தெரியாமல் அவருடைய மின்னஞ்சல் தொடர்புகள் பலமுறை கையாளப்பட்டுள்ளது. 22 மாதத்திற்கும் மேலாக ஹேக்கர்கள் இதனைச் செய்துள்ளனர்.ரோனா வில்சனின் கணினியின் செயல்பாட்டைக் கண்காணித்தபடியே அதற்குள் ஆவணங்களை உட்செலுத்தி உள்ளனர்.

இந்த குறிப்பான வேவு மென்பொருளை பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பலரது கணினியைத் தாக்குவதற்கும் பயன்படுத்தியுள்ளனர். இதையெல்லாம் அந்த அமெரிக்க நிறுவனம் கண்டறிந்ததுடன் ரோனா வில்சனின் கணினிக்குள் தனது வேவு மென்பொருளை ஹேக்கர் நுழைத்த நாளையும் துல்லியமாக கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன் பிரதமர் மோடியை கொலை செய்ய வேண்டும் என மின்னஞ்சல் அனுப்பியதாக சொல்லப்படும் வரவர ராவின் மின்னஞ்சல் முகவரியை அவரே அறியாமல் பயன்படுத்திய ஹேக்கர்கள் அனுப்பிய சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

இவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கும் ‘ஆர்செனல் கன்சல்டிங்’ என்ற அமெரிக்க நிறுவனம் சாதாரணமானதல்ல. அமெரிக்க அரசின் கணினி தடய அறிவியல் துறைக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் நிறுவனம் அது. இதிலிருந்து இந்துத்துவவாதிகள் மீது சுமத்தப்பட்ட பீமா கோரேகான் குற்றச்சாட்டை மடைமாற்றம் செய்வதற்காக மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டு ஜனநாயக முறையில் மனித உரிமைகளுக்காக சர்வதேச அளவில் குரல் கொடுத்து வருபவர்களைக் கைது செய்துள்ளது அம்பலமாகிறது...’’ என்கிறார் முனைவர் மு.இனியவன்.

அன்னம் அரசு

Tags : Modi ,US , அமெரிக்க நிறுவனம்
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...